2017-09-16

பறத்தல்

வலசைப் பறவைகளின்
வசந்தகால சஞ்சாரமாய், வேடந்தாங்கலிலிருந்து
புறப்படுகிறேன்.
சடத்தின் நுண்ணிய நகர்ச்சி
அவ்வளவே.
எங்களின் வெறுமை நிலவுகிற
வெளியின் வெற்றிடம். கல்லாசனம்.
அந்திக் கதையரங்கு, பந்தாட்டவெளி
அகலப்பட்டிகை அலைவெளி செறிந்த
வடக்கு ஓடை.
மேடைக்குப்பின்பக்கம்
இடக்கைக்கதிரை.
எல்லாம் மீள நிரம்பும்.
என்றாலும் நினைவுகள்
அலையும்
திரியும், மறையாது.
புத்தக மூட்டை சுவர்ப்பதிப்புகளுடன்,
நல்ல மனங்களையும், நினைவுகளையும்
அம்பரில் இறுகிய
உயிருடை மின்மினியாய்
பத்திரமாய் பொதி செய்திருக்கிறேன்.
ஆத்மாக்கள் தொலைமன உரையாடலாய் (Telepathy)
தொடர்ந்து பேசிக்கொள்ளும்.
யாழகமே விடைதாராய்!
Jaffna is not a single word.
I have an interusting story of four years.

2017-09-14

சமுத்திரத்தில் ஒரு சிறுமி



கூரையின் சிறு இடுக்குவழி துளிக்கும் மழைத்திவலைகளை, 
பொட்டுப் பொட்டாய்ச் சப்தமிட்டு
கீழே அருந்திக் கொண்டிருக்கிற
தகரப்பாத்திரத்தைக் கடந்து செல்கிறாள் அந்தச் சிறுமி

இடைக்கிடை ஒவ்வொரு துளியை யுள்ளங்கையில்
மோதி உடைத்து விட்டு - தன்பாட்டில்
ஈரக்கையை ஆடையில் துடைத்துவிட்டு போகிறாள்

கணுக்காலளவு எட்டிப்பார்த்து வாசலில் வழிதேடி அலைந்து திரிகிற தண்ணீர்,
அதற்குள் இறங்கி தன் காகிதக் கப்பல்களை
ஓவ்வொன்றாய் இறக்கி விடுகிறாள்.

கச்சான் சுருளுக்காய் கத்தரிக்கப்பட்டவை
கப்பலாகிப்போயின அந்தப் பிஞ்சு விரல்களினாற்
செய்த மடிப்புகளினாலும்
விரிப்புகளினாலும்

இப்போது அவளொரு மீகாமனாய்,
அந்த நீரோட்டம், சுழற் புயலில் ஒரு சமுத்திரம்

அவளது முழுக்கவனமும் கப்பல் கட்டுமானத்திலும்
தன் கண்களால் அவள் குறி வைத்திருக்கிற எல்லை வரை அந்தக் கப்பல்களை அடையச் செய்வதிலும் இருக்கிறது

நனைந்த அடுப்படியிலும்
தேமித்தேமி அழுகிற குடிசை கூரையிலும்
தனது ஈரந்துவட்டாத தலைமுடியிலும்,
நாளை சீறிச்சீறி ஒழுகப் போகிற மூக்கைப் பற்றியும்,
அவளுக்கு அக்கறையில்லை
அவளுக்குப் பசிக்கவுமில்லை
காரியத்திற் கண்ணாயிருந்தாள்

எப்போதாவது ஒரு கப்பல் இலக்கை அடைந்துவிட்டால்
அவளுக்கு ஒரு புன்னகை
கவனம் இன்னும் அதிகரித்துவிடுகிறது.

கடப்படியில் நிலையில் சாய்தவளாய்
ஊள்ளங்கையொன்றிற் தலையை ஏந்திக் கொண்டு
அந்த மீகாமனின் துணிகரமான கப்பலோட்டத்தை
சவால்மிக்க சாகசப் பயணத்தை
வியந்த கண்களோடும்
குழந்தை மனதின் ஆநந்தத்தோடும்
ரசித்துக் கொண்டிருக்கிறாள் அவளின் தாய்

நிம்மதியும் திருப்தியும்
மழை ஓய்ந்தபின்னும் இருக்கிறது

- இவண் சஞ்சாரி

2017-09-12

நான் சொல்ல என்ன இருக்கிறது?

நான் யாரென்று
நீங்கள்தான் சொல்லுகிறீர்கள்
நான் யாரில்லை என்றும்
நீங்கள்தான் சொல்லுகிறீர்கள்.
நான் எதுவெல்லாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ
அதுவெல்லாம் நானாக இருக்க முடியாது
நான் எதுவெல்லாம் என்று நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையோ
அதுவெல்லாம் கூட நானாக இருக்க முடியாது
உங்களுக்கே உங்களை யாரென்று
முழுமையாகத் தெரியாதிருக்கிற போது

2017-09-10

வேட்டையன் மனது

அந்த வேட்டைக்காரனுக்கு
காடுகள் அத்துப்படியாயிருந்தது.
அங்குலம் அங்குலமாக
அவனுக்குத் தெரியும்.

திருகிய கொடிகளும்
முறுக்கிய அடர்வைர மரங்களும்.
காட்டுக்குருவிகளும்.
வனஜீவராசிகளின் ஒவ்வொரு அசைவும்
அவனுக்குத் தெரிந்திருந்தது.
ஒர்ஈட்டியும், இடைக்குறுவாளும்
அவனுக்குப் போதும்.
 உண்ண,
 களிக்க,
 உறங்க,
 உடுக்க,
மருந்திட எல்லாவற்றிற்கும்.
அவன்
ஜீவிதத்தைக் கடத்திக்கொள்வான்
ஏனென்றால்
காடு காடாகவே இருக்கிறது.

ஆனால் குள்ள நரிகளாகவும்,
 கழுதைகளாகவும்,
புலிகளாகவும்,
பாம்புகளாகவும்,
கூகைகளாகவும்,
சில வேளை மான்களாகவும்
மாறிப்போகிற மனிதர்களை மட்டும்
கடைசிவரை
அவனால் முழுமையாக புரிந்து கொள்ளவே முடியவில்லை.
ஏனென்றால்
நாட்டில் மனிதர்கள்
அடிக்கடி மாறிக்கொள்கிறார்கள்

2017-09-08

சாராப் பயணம்

பாதையை உதைத்துப் பின்னே
தள்ளிக் கொண்டிருக்கிறோம்
என்வீடு வரைக்கும்.
நிலவும் நட்சத்திரங்களும் நாங்களும்
நின்றபடியே இருக்கிறோம்
மரங்களும் வீதியும் பின்னே கடந்து செல்கின்றன
பிரயாணம் அலுப்பும் களிப்பும்
வாழ்க்கையைப் போலவே

2017-09-03

வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமானது


-------------------------------
சின்னச்சின்ன மினுக்கங்கள் கொண்ட மின்மினிகளின்
ஒளிமுடிச்சுக்கள் தருகிற குதூகலத்தையும் அதைக்
கொண்டாடுகிற
குழந்தை மனதின் ஆனந்தத்தையும்,
கண்களைக் கூசச்செய்து
நிரம்பி வழிகிற சூரியனின்
ஒளிர்வெள்ளத்தில் அனுபவிக்க முடியாது.
அரைக்கோள விண்வெளியில்
ஆங்காங்கே பொடிதாய்த் தூவப்பட்டிருக்கிற
ரத்தினத்துணிக்கைகளையும்
சிமிட்டிச் சிமிட்டி அவை சொல்கிற
சங்கேதங்களையும்,
ஓராயனின் இடுப்புப் பட்டியையும்
வானின் தேளையும்
பெருங்கரடி, இரட்டையர்
இவர்களையும்
தெருவிளக்குகளும், கைலாந்தரும்
அற்ற வெறுங்கையுடன்
கடற்கரை மணல்வெளியிலோ
கானகத்திடை புல்வெளியிலோ
கைகளையும் கால்களையும் அகல விரித்து,
ஆழமூச்செடுத்து
உலகையே துறந்து
ஆசுவாசமாக ரசிப்பதற்கு
இராத்திரி நீளமாக இருந்தாக வேண்டும்.
தனிமையின் ராஜனே
நீ படுத்திருப்பது
நாசியை
ஊடறுத்து,
மனோவசியங்களின் மணத்துகள்கள்
பொடித்துப் பறக்கும்
புஷ்பகவனத்தில்.
புற்றாள்களை மறைத்து
முதுகுக்குக் கீழே
கதகதப்பாய்க் கொட்டிக்கிடப்பது
மென் மலரிதழ்கள் மற்றும
மிருதுவான மகரந்தங்கள்
இந்த வானின் மெல்ல அருட்டும்
ஒளித்துணிக்கைகள் மட்டும்
கொண்ட
இருட்டுக் கும்பாசத்துக்குள்
கருப்பாய் தெரிவதால்
இந்த மலர்வனத்தின்
இயற்கையும்
கருகருப்பாகிவிடாது.
இராத்திரியின் கிறக்கம்
தெளிந்து,
விடியலின் பனிப்புகாரில்
கசிகிற ஒளிப்பாகில்
படிவுவீழ்சிகளைத்
துளித்துளியாய்
மணிமணியாய்
ஏந்திக்கொண்டு
கிரணங்களை
முறித்தும் தெறித்தும்
வண்ணச் சித்திரம் காட்டும்
இந்த மலர்வனத்துக்
கொடும் அழகை
இரவுகளில் களிக்க முடியாது.
ராத்திரிகளும்
பகல்களும்
மாறிமாறிச் சேவகம் செய்கின்றன
ராஜனே
நீ இன்னும்
கூரையின் இடுக்கிற் பொசியும்
ஒற்றைக் கற்றையையும்
அதைக் கடக்கும்
தூசுகளின்
பிரவுனியன் நடனத்தையும்
மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
கூரைகளைப் பெயர்த்தெறி
சுவர்களைத் தகர்த்தெறி
இனி கதவுகளுக்கும்
யன்னல்களுக்கும் வரி செலுத்தத் தேவையில்லை.
அல்லது
பிரபஞ்சத்தில் உனது
ஒற்றை அறையைவிட
பிரம்மாண்டமாய் பெருவெளியிருப்பதை
அறிய
சற்று
கடந்துவா!
வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமானது.

2017-07-26

ஹைக்கூ

கலைக்கப்படாத 
மௌனங்கள் - நீ
அரநாயக்கவின் கறுப்புப்பெட்டியாய்

2017-07-05

முரண் வலி

இரத்தம்
தக்காளிச்சட்னியாக தெரிந்த வீதிகளில்
அரத்த நிறத்தில் எதைப்பார்த்தாலும்
இரத்தமாக தோன்றுவது 
அப்பாவித்தனம்
ஆனால் அது நசுக்கப்பட்ட
இன்னுமொரு அப்பாவி பழத்தினுடையது
அன்றி
தட்டிலே அலங்காரமாக அடுக்கப்படிருக்கும்
பிரஞ்சுப் பொரிகளினுடையது அல்ல.
.........
இடையிலே அந்த பொரி வியாபாரியின்
உருளை சீவல்கள்
தொட்டுக் கொள்ள ஏதுமின்றியும்
விற்றுத் தீர்ந்து விட்டது.
தங்கள் இரு கண்களையும்
தொலைக்காட்சிப் பெட்டியின்
கண்ணாடித்திரையருகே வைத்து
மூக்கையும் முட்டி நசுக்கிக் கொண்டு
இமை கொட்டாமல்
இந்த விளம்பரத்தை
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
இரு சிறுவர்கள்
என்றாலும்
இனி அவர்கள்
குருதி வடிகிற இந்தப் பிரஞ்சுப் பொரிகளுக்காக
அனுதாபப்படுவார்கள்.

2017-06-30

நீதான்

சூளிகையிலே எனைச் சூழ்ந்த குளிரே
சூழுரைக்குமென் சுவாச அதிர்வே
போகன் மகளே- என்னுட் பெயர்ந்த வனமே
புத்தன் கனவே -என் சித்தத் தெளிவே

காத்திரு எனைக்காத்திரு

2017-06-03

கலைத்து விடாதே


.................................................
பால்குடி மறவா
பூனைக்குட்டிகள்
இன்னும் கண்திறக்கவில்லை
தாயின் கதகதப்பில்
இன்னும் ஆழக்கனவுகளிலிருக்கிண்றன.
விழ்த்திரைகளில் கிரணங்கள் படாத
நிஜத்திலும்
அவை மின்மினிகளைக் காண்கி்ன்றன.
மொது மொது கால்விரல்களிலிருந்து
கூர்மழுங்காத பிஞ்சு நகங்களும்
உறக்கத்தில் வெளியே வந்து வந்து போகின்றன.
கனவில் அதை எட்டிப் பிடிக்க முயற்சிக்கலாம்.
அதன் நாவு ஏதோ சுவைத்ததாய்
உணர்ந்திருக்க வேண்டும்
வெளியே நீட்டி நனைக்கின்றது.
இன்னும் அது புறஉலகைக் காணவில்லை
அதன் சிறு பொழுது கனவுகளைக்
கலைத்து விடாதே
அது கொஞ்சநேரம் மகிழ்சியுடன் உறங்கட்டும்